பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடு படும் போது நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய்களே பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன(sexually transmitted disease ) . அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன.
இந்த நோய்கள் பாலியல் தொடர்புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.
பாலியல் தொற்று நோய்கள் கடத்தப் படக்கூடிய முறைகள்….
- தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்
- தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது
- தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்
- பச்சை குத்துதல்
- அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன் படுத்துதல்
- தாய்ப்பாலின் ஊடாக
- கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக
- பொதுவான அனைத்து முறைகளையும் மேலே கூறியுள்ளேன் . எல்லா நோய்களும் எல்லா விதமாகவும் கடத்தப் படுவதில்லை.
இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக காணப்படும் பாலியல் தொற்று நோய்கள்…
- கொனேரியா(gonorrhoea)
- சிபிலிசு(syphilis)
- பாலுறுப்பு ஹேர்பீஸ்(Genital Herpes)
- பாலுறுப்பு உண்ணிகள்(Genital Warts)
- கிளமிடியா(Clamydia)
- எயிட்ஸ்(Aids)
- ஈரல் அழற்சி B(hepatitis B)
எந்த விதமான செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை கொண்டவர்கள்
- விபச்சாரத்தொடர்பில் ஈடுபடுவோர்
- ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்
- ஊசி மூலம் போதைப் பொருளை பாவிப்பவர்கள்
- பாலுறுப்புக்களில் காயம் உள்ளவர்களோடு உறவில் ஈடுபடுதல்
இந்த நோய்களின் குணங்குறிகள் பெரும்பாலும் பாலுறுப்பு பிரதேசத்திலேயே ஏற்பட்டாலும், சில நோய்களின் குனக்குரிகள் வேறு விதமாகவும் , வேறு இடங்களிலும் வெளிக்காட்டப் படலாம்.
சில பேரில் இந்த நோய்கள் நீண்ட காலத்திற்கு அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு , அவர்களோடு உறவில் ஈடுபடுவோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.
பாலியல் தொற்றாக இருக்கக் கூடிய சில குணங்குறிகள்!
- பாலுறுப்பு பிரதேசத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்
- பாலுறுப்பு பிரதேசத்தில் காயங்கள் ஏற்படுதல்
- பிறப்பு வழியின் ஊடாக சீழ் வெளியேறுதல்
- சிறுநீர் கழிக்கும் பொது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
- உடலுறவின் போது வலி ஏற்படுதல்
- அடிவயிற்று நோவு
- பாலுறுப்பு பிரதேசத்தில் அரிப்பு(கடி) ஏற்படுதல்
- பாலுறுப்பு பிரதேசத்தில் உண்ணிகள் வளருதல்
- விதைப் பைகளில் வீக்கமும் நோவும்
கொனோரியா(Gonorrhea)
இது நிஸ்சோரியா கொனோரியா(Nisseria gonorrhea) எனப்படும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும். தொற்று ஏற்பட்டு .. தொடக்கம் .. நாட்களில் இந்த நோய் வெளிக்காட்டப்படும்.
இது ஆண் பெண் என இரு பாலாரையும் பாதித்தாலும் பிரதானமாக் குணங்குறிகளை வெளிக்காட்டுவது ஆணில் ஆகும்.
ஆண்களில் ஏற்படும் அறிகுறிகள்
- ஆண் உறுப்பில் இருந்து மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
- சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
- அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
பெண்களிலே ஏற்படும் அறிகுறிகள்
பெண்களின் கருப்பைக் கழுத்துப் பகுதியே தொற்றுக்கு உள்ளாகும்.
அநேகமான பெண்களில் நோய் தோற்றி இருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுவதில்லை.
சில பெண்களில் சில அறிகுறிகள் ஏற்படலாம். அவையாவன.
- பிறப்புறுப்பின் ஊடாக மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
- சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
- அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
- மாதவிடாய் ஒழுங்கின்றி நடைபெறுதல்
- அடிவயிற்றில் நோவு ஏற்படுதல்
இது தவிர வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு தொண்டைக் கரகரப்பும் , தொண்டையில் தோற்றும் ஏற்படும். குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு குடல் தொற்று ஏற்படலாம்.
கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் ஏற்படுமானால் பிறக்கின்ற குழந்தையின் கண்களிலே தொற்றுக்கள் ஏற்படலாம். இவ்வாறு கண்களிலே தொற்று ஏற்பட்ட குழன்ற்ஹைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.
இந்த நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது எல்லா இடங்களிலேயும் கிடைக்கின்றன. அவை சில நாட்களுக்கே பாவிக்கப்படவும் வேண்டும்.
ஆகவே மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சிபிலிசு (Syphillis)
இது ட்ரிபோனாமா பாலிடம்(Treponema pallidum )எனும் பக்டீரியாவால் ஏற்படுகின்றது.
இது தனது அறிகுறிகளை மூன்று பருவங்களாக வெளிக்காட்டும்.
முதற் பருவத்திலே பிறப்பு உறுப்புக்களைச் சுற்றி காயங்கள் ஏற்படும். அவை சற்றி தடிப்பான காயங்களாக இருந்தாலும் அவை நோவினை ஏற்படுத்தாது.
இந்த பருவத்தில சுகமாக்கப்படா விட்டால் அந்தக் கிருமி பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களில் இருந்து குருதியை அடைந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு சென்று அறிகுறிகளை ஏற்படுத்தும்.இது இரண்டாவது பருவம் எனப்படுகிறது.
அதாவது இரண்டாம் பருவத்தில் கிருமிகள் உடலின் மற்றைய பாகங்களுக்கு பரவுவதால் உள்ளங்கை , கால் , முகம் போன்ற பகுதிகளில் சிரங்குகள் ஏற்படும். இதன் பொது காய்ச்சல் , மூட்டு வலி , தலை வலி போன்றவையும் ஏற்படலாம்.
இந்த இரண்டாவது பருவமும் சரியாக குனமாக்கப்படா விட்டால் அடுத்த பருவமான மறை பருவம் என்ற நிலை ஏற்படும். அதாவது இரண்டாவது பருவத்தில் ஏற்படும் அறிகுறிகளான சிரங்கு, காய்ச்சல், மூட்டு வலி போன்றவை மறைந்து நோய் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாத நிலையை அடையும்.
இவ்வாறு அறிகுறிகள் மறைந்தாலும் நோய் மற்றவர்களுக்கு தொற்றிக் கொண்டேதான் இருக்கும்.
இந்த மறை பருவமும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படா விட்டால் நரம்புத் தொகுதி , இதயம் என்பவை பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நோய் முற்றாக குணமாக்கப் படலாம்.
கர்ப்ப காலத்தில் இந்த நோய் ஏற்படுமானால் கருப்பையில் உள்ள குழந்தைக்கு பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.
அவையாவன
- கருச் சிதைவு
- குழந்தை செத்துப் பிறத்தல்
- குறைபாடுள்ள குழந்தைகள்
- சிபிலிசு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவை.
தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து பெண்களும் கர்ப்பம் தரித்தவுடன் VDRL என்ற சோதனை செய்து தங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது உகந்தது.இலங்கையில் உள்ள அனைத்துப் கர்ப்பிணிகளுக்கும் அரசினாலேயே இலவசமாக இந்தச் சோதனை செய்யப் படுகிறது.
பிறப்புறுப்பில் ஏற்படும் உண்ணிகள் (Genital Warts)
இது ஹியுமன் பப்பிலோமா எனும் வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும்.
தொற்ற ஏற்பட்டு இரண்டு வாரமளவில் நோய் வெளிக்காட்டப்படும்.
அறிகுறிகள்
பாலுறுப்புக்களில் உண்ணிகள் வளர்த்தல் சிறிய பூக்கோவா போன்ற இளம் சிவப்பு அல்லது செந்நிற உண்ணிகள். இவை நோவை ஏற்படுத்த மாட்டாது .
இந்த உண்ணிகள் பாலியல் தொடர்புக்கு உள்ளாகும் இடங்களான பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, குதம் (மல வாயில்) , வாய் போன்ற இடங்களில் ஏற்படும். தொடுகை காரணமாக இவற்றில் இருந்து சிலவேளை இரத்தம் வெளிவரலாம்.
இந்த வைரஸ் கருப்பைக் கழுத்திலும் தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வாறு கருப்பைக் கழுத்திலே தோற்று ஏற்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் கருப்பைக் கழுத்து புற்று நோய் கூட ஏற்படலாம். பப் சோதனை (PAP)எனப்படும் சோதனை மூலம் வைரசு தோற்றி உள்ளதா என்று துரிதமாக அறிந்து கொள்ள முடியும்.
கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் பிறப்பின் போது தொடுகை ஏற்படுவதால் குழதைகளுக்கும் இந்த நோய் ஏற்படலாம்.
இப்போதைய வைத்திய வசதிகள் மூலம் இந்த நோயும் முற்றாக குணமாக்கப் படலாம்.
மேலே உள்ள அறிகுறிகள் வெறுமனே பாலியல் சம்பந்தமான நோய்களில் மட்டும் ஏற்படுவதில்லை வேறு பல நோயகளிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால உடனேயே அது ஒரு பாலியல் நோய் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.
தகுதியான வைத்திய ஆலோசனை பெற்று சரியான வைத்தியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்ட பொதுவான் பாலியல் நோய்களைலே எயிட்ஸ் மற்றும் ஈரல் அழற்சி தவிர்ந்த ஏனைய அனைத்து நோய்களையும் பூரணமாக சுகமாக்குவதற்கான மருந்துகள் உள்ளதால் உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்று உங்களை சுகமாக்கி கொள்ளுங்கள்.
Leave a comment